காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அழைப்பு...
இன ஒதுக்கல் கொள்கை உள்ள நாட்டைத் தவிர, வேறு எந்த நாட்டிலாவது காவிரி உரிமையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிபோல் இனப்பாகுபாடு காட்டி அநீதி இழைக்கப்பட்டதுண்டா?
இந்தியாவிலிருந்து சிந்து, சீலம், செனாப் ஆறுகள் ஒப்பந்தப்படி பாக்கித்தானுக்கு ஓடும்; கங்கை வங்காளதேசத்துக்கு ஓடும். இந்தியாவுக்குள்ளேயே நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஆறுகள் தீர்ப்பாயத் தீர்ப்பின்படி அண்டை அயல் மாநிலங்களுக்கு ஓடும்! ஆனால், தீர்ப்பாயம் தீர்ப்புக் கொடுத்தாலும், உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தாலும் காவிரி மட்டும் கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு ஓடி வராதா?
இந்த இனப்பாகுபாடு மற்றும் இன ஒதுக்கல் அநீதிக்கு யார் யார் பொறுப்பு?
முதல் குற்றவாளி – கர்நாடகம்; இரண்டாவது குற்றவாளி இந்திய அரசு; மூன்றாவது பொறுப்பாளி உச்ச நீதிமன்றம்.
நான்காவது பொறுப்பாளி நாம்தான்! நாம் என்றால் நமக்கு வாய்த்த அரசியல் தலைமைகள்! சட்டப்படியான காவிரி உரிமையைக் கூட காப்பாற்ற முடியாத தலைமைகள்! அந்த அரசியல் தலைமைகளை சுமந்து கொண்டிருக்கும் நாம்.
தமிழ்நாட்டின் மக்கள் தொகை எட்டு கோடி! பிரிட்டன், பிரான்சு நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம்! இருந்தும், நமக்கான தேசிய இன அங்கீகாரத்தை இந்திய அரசு தரவில்லை! இனச்சமத்துவம்கூட வழங்கவில்லை.
இந்திய அரசில் காங்கிரசு இருந்தாலும், பா.ச.க. இருந்தாலும் காவிரியில் தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வந்துள்ளன. 1956ஆம் ஆண்டின் ஆற்று நீர்ப் பகிர்வுச் சட்டப்படியும், இந்திய அரசமைப்புச் சட்டப்படியும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நீதியைக் கிடைக்காமல் காங்கிரசும், பா.ச.க.வும் தடுத்து வந்துள்ளன.
இப்போதும் அதே நிலைதான்! இந்திய ஆட்சியில் பா.ச.க.. கர்நாடக ஆட்சியில் காங்கிரசு.
பா.ச.க. – காங்கிரசு தலைமைகளின் தமிழர் எதிர்ப்பு அரசியலுக்கு இப்போது உச்ச நீதிமன்றமும் ஒத்தூதுகிறது. அதிலும் தீபக் மிஸ்ரா ஆயம் இந்திய அரசமைப்புச் சட்டத்தை இச்சிக்கலில் புறந்தள்ளி அநீதி இழைத்துள்ளது.
தமிழ்நாட்டுக் காவிரி உரிமையைப் பலியிடத் திட்டமிடும் மோடி அரசுக்கு முழுவதும் துணைபோகறது உச்ச நீதிமன்றம்.
தமிழ்நாடு தழுவிய அளவில் காவிரி உரிமைப் போராட்டம் எழுச்சி பெற்றுள்ள இன்றைய நிலையில், இறுதி வெற்றி கிடைக்கும் வரை இப்போராட்டத்தைத் தொடர வேண்டும். காவிரி உரிமை மீட்புக் குழு பல போராட்டங்களை நடத்தி வருகிறது.
அதன் அடுத்த போராட்டம் – 12.05.2018 – காரி (சனி)க்கிழமை காலை 10 மணிக்கு, தஞ்சை விமானப் படைத்தளத்தை முற்றுகையிடும் போராட்டம்.
1. இந்திய அரசே, காவிரித் தீர்ப்பாயம் கூறியுள்ள கட்டமைப்பும் அதிகாரமும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடு!
2. காவிரி டெல்டாவில் இராணுவத்தை அனுப்பாதே – காவிரியை அனுப்பு!
3. அதிகாரமில்லாத செயல்திட்டம் அமைத்தால் எதிர்த்துப் போராடுவோம்!
4. உச்ச நீதிமன்றமே, கட்டப்பஞ்சாயத்து செய்யாதே! சட்டக் கடமையை நடுநிலையோடு செயல்படுத்து! காலம் கடத்தாதே!
5. தமிழ்நாடு அரசே, தீபக் மிஸ்ரா ஆயத் தீர்ப்பினால் தமிழ்நாடு இழந்துள்ள காவிரி உரிமைகளை மீட்க – காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் அமைத்திட சட்டப்போராட்டம் நடத்து! இனத்துரோகம் செய்யாமல் தமிழ்நாட்டு மக்கள் பக்கம் நில்!
தமிழர்களே, 12.05.2018 – காரி (சனி)க் கிழமை காலை 10 மணிக்கு தஞ்சை மேலவஸ்தாசாவடியில் கூடி
விமானப்படைத்தளம் நோக்கி
பெருந்திரளாய் அணிவகுப்போம்!
வாருங்கள் வாருங்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.