எலிக்கறியை சுத்தம் செய்யும் இளைஞர்...
அலைந்து திரிந்து ஒரு எலியை கண்டுபிடித்ததும் 7 வயது புத்யாவின் கண்கள் மகிழ்ச்சியால் நிரம்புகின்றன. அவளுக்குள் அப்போது ஒரே ஒரு எண்ணம் தான் உதித்திருக்கும், ‘இன்றிரவு நான் பசியுடன் தூங்க செல்ல மாட்டேன்...’
ஜார்க்கண்ட், ராஞ்சியிலிருந்து 200 கிமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கர்வ்ஹா கிராமம். அங்குள்ள அரசுப்பள்ளியின் அருகே பிளாஸ்டிக்கால் டெண்ட் அமைத்து 16 வருடங்களாக தங்கியிருக்கிறார்கள் முஷாஹர் இனத்தை சேர்ந்தவர்கள். முழுவதும் கிழிந்து துளைகளால் ஆன டெண்டுகளுக்குள் 10 குடும்பத்தை சேர்ந்த சுமார் 100 பேர் தங்கியிருக்கிறார்கள். இந்தியாவின் குடிமக்கள் என சொல்ல அவர்களிடம் ஆதார் அட்டையோ, ரேஷன் கார்டோ அல்லது எந்தவொரு அடையாளமும் இல்லை. வறுமையின் காரணமாக அரிசி என எந்த அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காத நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களிடம் பிச்சை எடுத்து வாழ்கிறார்கள். ஆனால் சாதி ரீதியான பாகுபாடு நிலவுவதால் ஒரு கட்டத்திற்குமேல் உணவு கொடுக்கவும் அங்கு யாரும் தயாராக இல்லை.
மூன்று வேளை உணவுக்கே வழி இல்லாத நிலையில் ஜார்க்கண்டின் குளிரில் தூங்குவதற்கு அவர்களிடம் ஒரு கம்பளி கூட இல்லை. மண்ணில் குழி தோண்டி எலியை பிடிக்கிற 7 வயது புத்யாவின் மெலிந்த தோற்றத்தைப் பார்க்கிற யாரும் அவளுக்கு 3 வயதுகூட தாண்டியிருக்கும் என நம்பமாட்டார்கள். “எலியை ஒவ்வொருமுறை சாப்பிடும்போதும் மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் அதுதான் எங்களுக்கு விதிக்கப்பட்டது என உணர்ந்த பிறகு எங்களுக்கு வேறு வழியில்லை...” ஆதங்கப்படுகிறார் முஷாஹர் இனத்தை சேர்ந்த ஹரி.
“ ஊரில் கோவிலுனுள் அளிக்கப்படும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட சென்றால் கேட்டிலேயே தடுத்து நிறுத்தப்படுகிறோம்... அருகில் அரசுப்பள்ளி இருப்பதால் அங்கு படிக்கும் குழந்தைகள் உண்ணும்போது ஒவ்வொரு முறையும் ஏக்கத்துடன் அவர்களை பார்த்து கொண்டு நின்றிருப்பார்கள் புத்யா உட்பட மற்ற குழந்தைகள்...” சொல்லும்போதே கண்கலங்குகிறார் தேவி. இப்படி ஜார்கண்ட் முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் வறுமையில் பாதிக்கபட்டுள்ளதாக ஒரு தரவு கூறுகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.