ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த செட்டித்தோட்டம் புதூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி - திலகவதி தம்பதியரின் ஒரே மகன் பொன் சிவவேல். சிவகிரி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். விவசாயக் குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ, விவசாயத்தின் மீதும், கால்நடைகளின் மீதும் இந்தச் சிறுவனுக்கு அலாதியான ஆர்வம் இருந்திருக்கிறது.
சிறு வயது முதல் பெற்றோர்கள், உறவினர்கள் எனப் பலர் கொடுத்த பணத்தை உண்டியலில் சேர்த்து வைத்திருக்கிறான். ஒருநாள் உண்டியலை உடைக்க அதில் கிட்டத்தட்ட 19 ஆயிரம் ரூபாய் இருந்திருக்கிறது. அந்தப் பணத்தில் தனக்கு நாட்டு மாடு ஒன்றை வாங்கித் தர வேண்டுமென வீட்டில் அடம் பிடித்திருக்கிறான். `இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு மாடு வாங்க முடியாது’ எனப் பெற்றோர் சொல்ல, `கன்றுக்குட்டியாவது வாங்கிக் கொடுங்கள்’ என மறுபடியும் பிடிவாதம் பிடித்திருக்கிறான்.
பையனுடைய ஆர்வத்தைப் பார்த்து அவனுடைய பெற்றோர்கள் பழையகோட்டை மாட்டுச் சந்தைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். கன்றுக்குட்டியின் ஆரம்ப விலையே 37 ஆயிரம் எனச் சொல்ல, ஏமாற்றத்தோடு சிறுவன் வீடு திரும்பியிருக்கிறான். பையனுடைய சோக முகத்தைப் பார்த்த பெற்றோர்கள், மாட்டுச்சந்தை நடத்தும் உரிமையாளரிடம் பையனுடைய ஆசைகளைச் சொல்லி,`குறைந்த விலையில் ஏதாவது காங்கேயம் காளைக் கன்று கிடைத்தால் தெரியப்படுத்துங்கள்’ என்றிருக்கின்றனர்.
பள்ளிக்கூடம் படிக்கும் சிறுவனுக்கு நாட்டு மாடு மேல் உள்ள காதலையறிந்து வியப்படைந்த மாட்டுச்சந்தை உரிமையாளர், இந்தச் செய்தியை தன்னுடைய நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகத் தெரிவித்திருக்கிறார். அவர்கள் அந்தச் சிறுவனுக்குக் காங்கேயம் இனக் காளைக் கன்றினை வாங்குவதற்கு மீதமுள்ள பணத்தைக் கொடுத்து உதவ, சிறுவன் உற்சாகத்துடன் காளைக் கன்றினை வீட்டுக்கு ஓட்டி வந்திருக்கிறான் சிறுவன்.
சிறுவனின் நாட்டு மாடு மீதான ஆர்வத்தை பார்த்து பொதுமக்கள் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.