முதலாவது சிலுவைப் போர் (ஹி.491 − ௧ி.பி.1097) − 4...
முதலாம் சிலுவைப் போர்களின் தொகுப்பை நாம் கடந்த பதிவுகளில் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.அதன் வரிசையாக இதைக் காணுவோம்...
கி.பி.1101−ஆம் ஆண்டு மே மாதம் 2−ம் திகதி ஸீஸேரியா நகரம் சிலுவை வீரா்களால் முற்றுகையிடப்பட்டது. இரண்டு வாரங்களில் அவர்கள் அந்நகரத்தைக் கொள்ளையடித்துத் தமது வழமையான மிருகக் குணத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் செய்த பாதகங்களின் பயங்கரத்தைக் கண்டு அவர்களின் தளபதிகள் கூட அதிர்ச்சியுற்றனா். அந்நகரத்தின் பெரிய பள்ளிவாயிலொன்றில் மிகக் கொடூரமாக முஸ்லிம்கள் பழிவாங்கப்பட்டனா். "கருணையை எதிர்பார்த்து அப்பள்ளிவாயினுள் அடைக்கலம் புகுந்திருந்த முஸ்லிம் ஆண்களும் பெண்களும் பள்ளிவாயிலின் தரை குருதிக் குளமாக மாறும் வரை படுகொலை செய்யப்பட்டனா்" என்று சிலுவை வரலாற்றாசிரியர் ஸ்டீவன் ரன்ஸிமேன் (Steven Ransimon) குறிப்பிடுவது சிந்திக்கத்தக்கது.
இந்த வெற்றிகளின் பின்னர் பாதிமிய்ய ஆட்சியாளர்கள் பலஸ்தீனை மீட்டெடுக்கும் முயற்சியில் பல தடவைகள் ஈடுபட்டனர். என்றாலும், அவர்களின் முயற்சிகள் யாவும் சிலுவை வீரா்களால் இலகுவாக முறியடிக்கப்பட்டன.
அத்தோடு ஜப்பா, ஹைபா, திரிப்பொலி,
சிடோன் போன்ற பிரதேசங்களையும் சிலுவை வீரா்கள் கைப்பற்றினா்.
சுமார் 15 ஆண்டுகள் நடைபெற்ற யுத்தத்தின் விளைவாக சிரியாவின் கரையோரப் பிரதேசத்திலுள்ள இரண்டு நகரங்களைத் தவிர, ஏனைய நகரங்கள் அனைத்தும் சிலுவை வீரா்களால் கைப்பற்றப்பட்டன.
முதலாவது சிலுவைப் போருக்கும் இரண்டாவது சிலுவைப் போருக்கும் இடையிலான காலப்பகுதி...
முஸ்லிம்களிடையே காணப்பட்ட பிரிவுமனப்பான்மையும் ஒற்றுமையின்மையும் உள்நாட்டுப் பிரச்சினைகளுமே முதலாவது சிலுவைப்போரில் ஏற்பட்ட தோல்விக்கான முக்கிய காரணங்களாகக் கொள்ளப்படுகின்றன.
அப்பாஸிய ஆட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஸல்ஜூக்கியர் முஸ்லிம் ஆட்சியின் பிற்பட்ட ஆட்சியாளர்கள் நிலமானிய முறையின் கீழ் இராஜ்ஜியத்தைக் கூறுபோட ஆரம்பித்ததும் அவர்களின் பலம் குன்றத் தொடங்கியது.
ஸல்ஜூக்கிய சுல்தான் மலிக் ஷாஹ்விஷ் மரணத்தைத் தொடர்ந்து அவ்வரசு சிதைவுறத் தொடங்கிற்று. உள்வீட்டுப் பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து அரசு நலிவுறலாயிற்று. முதலில் மலிக் ஷாஹ்வின் மனைவி துர்க்கான் சாத்தானுக்கும்,மலிக் ஷாஹ்வின் புதல்வன் பா்க்யாரூக்கும் இடையில் குழப்பம் ஏற்பட்டது.
பின்னர் பர்க்யாரூக்கும் அவரது சிறிய தந்தைக்குமிடையில் குழப்பம் ஏற்ப்பட்டது. பின்னர் பர்க்யாரூக்கும் அவரது சகோதரான ஹா்ரான் பிரதேச ஆளுனர் முஹம்மதுக்கும் இடையில் ஏற்பட்ட பதவிப் போராட்டம் ஸல்ஜூக்கிய அரசில் அமைதி ஏற்பட சந்தர்ப்பமே இல்லாமலாக்கியது.
இவ்வாறு முஸ்லிம் அரசியலில் காணப்பட்ட குறுநில ஆட்சி முறையும் நிர்வாகச் சீர்கேடுகளும் அதீகாரப் போட்டிகளும் முஸ்லிம்கள் தமது மேற்குப் பிரதேசங்களுள் சில பகுதிகளை சிலுவை வீரர்களிடம் பறிகொடுக்க வழிவகுத்தன.
- தொடரும்.....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.