04/08/2018

சிலுவை யுத்தங்கள் - 16...


முதலாவது சிலுவைப் போர் (ஹி.491 − ௧ி.பி.1097) - 6...

நூருத்தீன் ஸன்கீயும் சிலுவை யுத்தங்களும்...

உண்மையில் இமாமுத்தீனினது மரணம்,முன்னெடுத்துச் செல்லப்பட்ட இஸ்லாமிய சிலுவை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில், அவர் உருவாக்கி நடைமுறைப்படுத்தியிருந்த அதே கொள்கைத் திட்டங்கள்தான் அவரது மகன் நூருத்தீன் ஸன்கீயீன் தலைமையின் கீழ் நடைபெற்ற இஸ்லாமியப் புனிதப்போரின் பொதுத் திட்டமாகவும் இருந்தது.

நூருத்தீன் ஸன்கீ அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டதும் சிலுவை வீரா்களுக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டார். அந்த நடவடிக்கைகளில் முக்கியமான சில அம்சங்கள் சுருக்கமாகப் பின்வருமாறு..

1.அன்தாகியாவில் ஆட்சிபுரிந்த சிலுவை வீரத் தலைவரைத் தோற்கடித்ததோடு, அவரின் அதிகாரத்தின் கீழிருந்த அதிகமான நகரங்களையும் கைப்பற்றினார்.

2.ஏற்கனவே, முஸ்லிம் இராச்சியத்துக்குட்படாத சிலுவை வீரத் தலைமை நடத்திய ரஹா ஆட்சியின் கீழிருந்த ஏனைய பகுதிகளையும் சேர்த்துக் கைப்பற்றினார்.

3.அன்தாகியாப் பிரதேசத்தினுள் ஊடுருவி, அதன் தலைவனைக் கைது செய்தார்.அதோடு திரிப்போலித் தலைவரையும் கைது செய்ததோடு தண்டப்பணம் செலுத்திய பின்னரே அவர்களிருவரையும் விடுதலை செய்தார்.

4.சிலுவை வீரா்களின் டமஸ்கஸ் கவர்னரைக் கைது செய்ததோடு அப்பிரதேசத்தைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார். இதன் மூலம் வடபகுதியிலும், கிழக்குப் பிரதேசத்திலும் சிலுவை வீரா்களை அடக்க முடிந்தது. சிலுவை வீரா்களை முழுமையாக முற்றுகையிடுவதற்காகத் தென்பகுதியான எகிப்தைக் கைப்பற்றுவதை மிகவும் அவசியமானதொரு காரியமாகக் கருதினார். இக்கட்டத்தில் எகிப்தில் காணப்பட்ட முஸ்லிம் சிற்றரசான பாதிமிய அரசு பலவீனமடைந்து நலிவுற்றிருந்தது. பாதிமியர்களில் ஒரு பகுதியினா் சிலுவை வீரா்களிடமும் மற்றுமொரு பகுதியினர் நூருத்தீனிடமும் உதவி கேட்கும் அளவுக்கு அவ்வரசின் நிலை மோசமாக இருந்தது.

5.எகிப்தைக் கைப்பற்ற நூருத்தீன், ஷேர்கோவினதும் தனது சகோதரா் மகன் ஸலாஹுத்தீனினதும் கூட்டுத்தலைமையில் படையொன்றை அனுப்பி வைத்தார். இவர்களிருவரும் எகிப்தை இலகுவாகக் கைப்பற்றிக் கொண்டனர். இதனால் தெற்கு, கிழக்கு, வடக்குப் பிரதேசங்களில் சிலுவை வீரா்களை அடக்க முடிந்தது.

சிறந்த கல்விமானாக இருந்த நூருத்தீன் ஸன்கீ ஆலிம்களை ஆதரித்ததோடு தனது ஆளுகைக்குட்பட்டிருந்த பகுதிகளில் கல்லூரிகளையும் மருத்துவ நிலையங்களையும் நிறுவினார்.நீதியின் மேல் விருப்பம் கொண்டிருந்த இவர், "தாருல் அத்ல்" எனும் பெயரில் உயர் நீதிமன்றம் ஒன்றை நிறுவினார்.

நூருத்தீன் ஸன்கீ அலெப்போவினாட்சி  பீடமேறிய சில நாட்களிலேயே எடேஸ்ஸா நகரக் கிறித்துவர்களும் ஆர்மினியர்களும் பிரஞ்சுக்காரா்களின் உதவியோடு அவரது ஆட்சிக்கெதிராகப் போர்க்கொடி தூக்கி,அந்நகரைக் கோட்டையைக் கைப்பற்றியதோடு அங்கு வாழ்ந்த முஸ்லிம்களையும் கொன்றனர். இதனைக் கேள்வியுற்று எடேஸ்ஸாவை நோக்கிப் படை நடாத்திச் சென்ற நூருத்தீன் ஸன்கீ எதிரிகளைக் கடுமையாகத் தோற்கடித்தார்.

இதன் பின்தான் இரண்டாவது சிலுவை யுத்தம் ஆரம்பித்தது அதனை அடுத்தப் பதிவில் காண்போம்.

- தொடரும்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.