04/08/2018

சிலுவை யுத்தங்கள் − 15...


முதலாவது சிலுவைப் போர் (ஹி.491 − ௧ி.பி.1097) −5...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்
சகோதரர்களே என்னால் சில வாரங்களாக வேலை பளுவின் காரணமாக இந்தப் பதிவை சரிவர போட இயலவில்லை சிரமத்திற்கு வருந்துகிறேன்.. இந்தப் பதிவை அப்படியே படிக்க தொடங்கினால் ஒன்றுமே புரியாது என்னுடைய முந்தைய பதிவுகளோடு இணைத்துப் படித்தால் மட்டுமே முடியும் அதை கவனத்தில் வையுங்கள்..

சிலுவைப் போா்களில் முஸ்லிம்களின் ஒற்றுமையின்மையைத் தான் நாம் பார்த்து வருகிறோம் அதன் தொடர்ச்சி....

ஹி−511−ம் ஆண்டு (கி.பி.1118 ஏப்ரல்) ஸல்ஜூக்கிய சுல்தான் முஹம்மத் மரணமானார்.அதற்கடுத்ததாக அதேயாண்டு (கி.பி.1118 ஆகஸ்ட்) மத்திய அரசின் தலைவர் அப்பாஸிய கலீபா அல் முஸ்தன்ஸிரும் மரணமானார்.

எனவே,இப்பின்டைவிலிருந்து முஸ்லிம் உலகு விடுபட்டுத் தலை நிமிர வேண்டுமாயின், முஸ்லிம் கிழக்குப் பிரதேசத்தில் அத்துமீறிப் புகுந்து ஆட்சி நடத்தும் சிலுவை வீரா்களை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவதற்கான உறுதியும் துணிவுமுள்ள ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபட வேண்டி ஒரு வழி மட்டுமே இருந்தது. இத்தேவை மோசுல் பிரதேசத்தில் வாழ்ந்த ஸன்கீ வம்சத்தினரின் தோற்றத்தினால் நிறைவேறலானது.

இஸ்லாமிய மத்திய அரசின் தலைவரான கலீபா அல் முஸ்தன்ஸிரின் மரணத்திற்குப் பின்,அவரது மகன் அபூ மன்ஸுர் அல்பரல் என்பவர், "அல்முஸ்தர்ஷித் பில்லாஹ்"எனும் பெயரில் புதிய அப்பாஸிய கலீபாவாகத் தேர்வு செய்யப்பட்டார்.இவர் ஆட்சிப் பீடமேறியபோது,சுல்தான் முஹம்மதின் மகன் மஹ்மூத் என்பவர் ஸல்ஜூக்கிய அரசின் சுல்தானாக இருந்தார்.

சுல்தான் மஹ்மூதின் காலத்தில்தான் சிலுவை வீரர்களை எதிர்த்துப் போராடி, இழந்த பகுதிகளை மீட்டெடுக்கக்கூடிய வலிமையுள்ள வீரா் ஒருவர் முஸ்லிம்களிடையே தோன்றினார். அவர்தான் இமாமுத்தீன் ஸன்கீ என்பவர்.

இவர் ஸல்ஜூக்கிய சுல்தான் மலிஷாஹ்வின் துருக்கிய அடிமையும் தளபதியுமான 'ஆத்ஸங்கர்' என்பவரின் புதல்வர் சுல்தான் பா்க்யாருக்கின் காலத்தில் ஆத்ஸங்கர் சிரியாவின் ஸல்ஜூக்கிய கவர்னர் 'தனஷ் அர்ஸலானுக்கு' எதிராக நிகழ்ந்த போரில் கொல்லப்பட்டார்.சுல்தான் பர்க்யாரூக், அவர் செய்த தொண்டுகளுக்கு நன்றிசெலுத்தும் முகமாக அவரது மகன் இமாமுத்தீனுக்கு இளவரசருக்குரிய கல்வியையும் பயிற்சிகளையும் அளித்தார்.

இதனால் இமாமுத்தீன் ஸன்கீயினால் மோசுல், ஹலப், ஹிம்மஸ், ஹுமாத், பஃலபக் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய ஒரு பலமான அரசை உருவாக்க முடிந்தது. இவ்வாறு பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இத்தலைவருக்கு சிலுவையுத்த வரலாற்றில் முக்கிய பதிவுள்ளது. முதலாவது சிலுவையுத்த வெற்றியைத் தொடர்ந்து சிரியாப் பிரதேசத்தில் சிலுவை வீரா்களால் உருவாக்கப்பட்ட 'ரஹா' ஆட்சியை வீழ்த்திய பெருமை இவரையே சாரும்.ஒவ்வொரு பிரதேசமாகக் கைப்பற்றி வந்து, கி.பி.1114−இல் சிலுவை வீரர்களது 'ரஹா' ஆட்சியை முற்றாக வீழ்த்தினார்.

தனது சாணக்கியத்தினால் கிறித்துவர்கள்,ரோமர்கள்,சிலுவை வீரர்கள்,ஏனைய எதிரிகள் அனைவரையும் அடக்கி வெற்றி வாகை சூடி வந்த தளபதி இமாமுத்தீன் ஸன்கீ,ஹி−541(கி.பி.1146) ஆம் ஆண்டு எதிரிகளிடமிருந்து இலஞ்சம் வாங்கிக் கொண்ட அவரது அடிமை ஒருவனால் தூங்கிக்கொண்டிருக்கும் போது வெட்டிக் கொல்லப்பட்டார்.

இமாமுத்தீன் ஸன்கீ இறையடி சேரந்ததும் அவரது மூத்த மகன் ஸைபுத்தீன் காழி என்பவர் மோசுலுக்கும் அடுத்த மகன் நூருத்தீன் மஹ்மூத் அலெப்போவுக்கும் தலைவராகினர். பிற்காலத்தில் நூருத்தின் மஹ்மூத் என்பவர் நூருத்தீன் ஸன்கீ எனப் பிரபல்யமானார்...

அடுத்தப் பதிவில் நூருத்தீன் ஸன்கீயுடனான சிலுவை யுத்தங்களைப் பார்ப்போம்.

- தொடரும்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.