04/08/2018

எஸ்சி, எஸ்டி சட்டத்தில் மீண்டும் கடுமையான பிரிவுகள்: மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...


எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம்பெறச் செய்ய வழிவகுக்கும் மசோதாவை, நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில், தலித் அமைப்புகள் சார்பில் வரும் 9-ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், மேற்கண்ட முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
முன்னதாக, தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குற்றம்சாட்டப்படும் நபர்களை முதல்கட்ட விசாரணை எதுவுமின்றி உடனடியாக கைது செய்வதற்கு தடை விதித்தும், குற்றம்சாட்டப்பட்டோர் முன்ஜாமீன் பெறுவதற்குரிய அம்சங்களை அறிமுகப்படுத்தியும் உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச்சில் தீர்ப்பளித்தது.

எஸ்சி, எஸ்டி சட்டத்தால் அப்பாவிகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் இந்த தீர்ப்பை வழங்கியதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. எனினும், இத்தீர்ப்பானது, எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கடுமையான பிரிவுகளை நீர்த்துப்போக செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவகாரத்தை முன்வைத்து, தலித், பழங்குடியின அமைப்புகள் சார்பில் கடந்த ஏப்ரலில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறைகளில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், தங்களது தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விரிவான பதிலை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு, இதர தரப்பினருக்கு உத்தரவிட்டனர்.

கூட்டணி கட்சி நெருக்கடி: இதனிடையே, எஸ்சி, எஸ்டி சட்டம் தொடர்பான தீர்ப்பை வழங்கிய இரு நீதிபதிகள் அமர்வில் இடம்பெற்றிருந்த ஏ.கே.கோயல், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கு தலித், பழங்குடியின அமைப்புகள் மட்டுமன்றி, பாஜகவின் கூட்டணி கட்சியான லோக் ஜன சக்தியும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

எஸ்சி, எஸ்டி சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை முறியடிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா கொண்டு வருவதுடன், ஏ.கே.கோயலையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்; இல்லையெனில், வரும் 9-ஆம் தேதி தலித் அமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் நாங்களும் பங்கேற்போம்' என்று லோக் ஜனசக்தி கட்சி எச்சரித்தது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த தலித் எம்.பி.க்களும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதால், மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்தது.

ஒப்புதல்: இந்நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், எஸ்சி, எஸ்டி சட்டத்தில் கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம்பெறச் செய்வதற்கு வழிவகுக்கும் புதிய மசோதாவை, நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதாவை நடப்பு மழைக்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வரவேற்பு: இதுதொடர்பாக லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது...

எஸ்சி, எஸ்டி சட்டத்தில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த கடுமையான அம்சங்களுடன் கூடிய புதிய சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மசோதா, வரலாற்றுசிறப்பு மிக்கதாகும். இதன் மூலம் அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வந்துள்ளன. எனவே, வரும் 9-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட போராட்டங்கள் கொண்டாட்டங்களாக மாறும். தேவைப்பட்டால் எஸ்சி, எஸ்டி சட்டத்தை மேலும் வலுப்படுத்தவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார் என்றார் பாஸ்வான்.

எனினும், முழு அடைப்பு போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக தலித் அமைப்புகள் சார்பில் உடனடியாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
நெருங்கும் தேர்தல்கள்: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதுபோன்ற சூழலில் தலித், பழங்குடியின மக்களின் கோபத்தை தணிக்கும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கை இருக்கும் என்று பாஜகவினர் நம்புகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.