எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது தெரிந்தும், அதை களையும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகிறோம். அந்த நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டால், வாழ்வில் நமக்கு தோல்வி என்பதே கிடையாது. எனவே அதற்கான வழிமுறைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
ஒரு எதிர்மறை சிந்தனையாளர், எப்போதும் பிறரிடம் குறைகளையேக் காண்பார். ஒரு ஆரோக்கிய மனிதரைக் கண்டால், அவர் நோயுற்றிருந்தால் என்ன ஆகும் என்ற வகையில் யோசனை செய்வார். அவர்கள் தங்களின் முழு வாழ்வையும், பிற விஷயங்களில் குறை கண்டுபிடித்தே வீணாக்குவார்கள்.
அதே சமயத்தில் நேர்மறை சிந்தனையாளர் என்பவர் உலகிலுள்ள அனைத்து விஷயங்களிலுமே அதே எண்ணத்துடன் இருக்க முடியாது. ஒரு சில விஷயங்களில் அவர் எதிர்மறையாகத்தான் செயல்பட வேண்டியிருக்கும். அந்த விஷயங்கள் அந்தக் குறிப்பிட்ட நபருக்கோ அல்லது சமூகத்திற்கோ தீங்கு ஏற்படுத்துவதாக இருக்கலாம்.
ஒருவருக்கு வாழ்வில் எதாவது ஒரு சூழலில் அல்லது சூழல்களில் எதிர்மறை எண்ணங்களை வந்தே சேரும். உதாரணமாக, தேர்வை சரியாக எழுதாததால் அதில் தோல்வியடைந்து விடுவோமா? என்று நினைப்பது அதில் ஒருவகை. ஆனால் இதுபோன்ற எண்ணங்களிலிருந்து விடுபடும் வழிகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகள் சில இங்கே வழங்கப்பட்டுள்ளன.
கவலைப்படுவதை நிறுத்துங்கள். கவலைகள் உங்களை சூழ்ந்திருக்கும்போது ஏதாவது நல்ல விஷயங்களைப் பற்றி நினையுங்கள்.
கவலைத் தரும் கலந்துரையாடலில் கலந்துகொள்வதைத் தவிருங்கள். இது எப்போதும் உங்களைப் பாதிக்கும். ஒருவேளை அதுபோன்ற சூழலில் சிக்கிக்கொள்ள நேர்ந்தால், நேர்மறையான விஷயங்களை நீங்களே முதலில் பேச ஆரம்பிக்கவும். எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டு, தங்களின் தோல்விக்கு மற்றவற்றை குறைகூறும் நபர்கள் நிறைய உள்ளனர். அந்தமாதிரி மனிதர்கள் இந்த நாட்டின் பல அமைப்பு முறைகளை(கல்வித் திட்டம், ஊழல், நிர்வாக அமைப்பு போன்றவை) குறைகூறுபவர்களாக இருப்பார்கள். அத்தகைய நபர்கள், ஒரு செய்தித்தாளை படித்தாலும்கூட, அதில் எதிர்மறை விஷயங்களையே தேடி எடுத்துப் படிப்பார்கள். அதுபோன்ற நபர்களை நீங்கள் தவிர்த்துவிட வேண்டும்.
இந்த உலகைப் பற்றி நேர்மறை எண்ணம் கொண்டவர்களிடம் நட்பை ஏற்படுத்திக் கொள்ளவும்.
மற்றவர்கள் கவலையிலிருந்து விடுபட அவர்களுக்கு உதவி செய்யுங்கள். இதன்மூலம் உங்களின் தன்னம்பிக்கை மேம்படும்.
இந்த உலகம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்ற எண்ணம் வேண்டும். அதேசமயம் தூய்மையான கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு, அந்த நம்பிக்கையும் துணைபுரியும்.
நேர்மறையாக சிந்தித்தல்...
உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களின் சக்தி மீது நம்பிக்கையின்றி உங்களால் எதிலும் வெற்றியடைய இயலாது.
மனஅமைதி என்பது ஒரு மனிதனின் வெற்றிக்கும், நிம்மதியான வாழ்வுக்கும் தேவையான அடிப்படைத் தகுதியாகும். பிரச்சினைகளை நம்முடன் தேக்கி வைத்திருப்பது அல்லது அதை நினைத்துக்கொண்டே இருப்பதானது எதையும் செய்யவிடாது. எதிர்மறை எண்ணங்கள் நம்மை நிம்மதியாக வாழ விடாது. நாம் நினைத்த காரியத்தில் வெற்றியடைய தேவையான சக்தியை நாம்தான் உற்பத்தி செய்துகொள்ள வேண்டும்.
எதிர்மறை சிந்தனையின் வெளிப்பாடுதான் கோபம். எனவே கோபமும், கவலையும் எப்போதும் இருக்கக்கூடாது. ஏனெனில், பலகீனமான மனிதர்களிடமிருந்து வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்க இந்த உலகில் பலர் காத்துக் கொண்டுள்ளனர். எதிர்மறை எண்ணங்கள் உங்களை பலகீனமானவர்களாக காட்டும். கோபம் மற்றும் கவலை போன்றவை எதிர்மறை எண்ணங்களின் தொடக்கப் புள்ளிகளாக உள்ளன. எனவே அவற்றை தவிர்க்க வேண்டும். இதன்மூலமே, நேர்மறை எண்ணத்தின் முதல் படியை நீங்கள் அடைகிறீர்கள்.
வாழ்வின் மோசமானப் பகுதியை கடந்துவிட்டோம், இனிமேல் நமக்கு வசந்தம்தான் என்று நினைக்க ஆரம்பித்தால், எதிர்மறை எண்ணங்களையும் களைய முடியும்.
நம் வாழ்வை உற்சாகமாக்கும் மாற்றம் நமக்கு வேண்டும். புதிய சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் நமது எண்ணங்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டக்கூடியவை. எனவே, எப்போதுமே புதிய எண்ணங்களுக்கு உற்சாகம் அளிக்க வேண்டும்.
மருத்துவ அறிவியலில் நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை என்னவெனில், ஒரு நோயாளி என்னதான் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், தனது உடல்நலம் விரைவில் தேறிவிடும், தான் பூரண குணமடைந்து விடுவோம், நமக்கு எந்த சிக்கலும் இல்லை என்று நினைத்தால், அவரின் அந்த எண்ணமும், அவர் குணமடைவதில் குறிப்பிட்ட பங்கை வகிக்கிறது. அதேசமயம், ஒரு நோயாளி, தான் எளிதாக குணமடையப் போவதில்லை, எல்லாம் முடிந்தது, இனி ஒன்றுமில்லை என்று நினைத்தால் அவரின் முடிவுக்கு அந்த எதிர்மறை எண்ணமும் ஒரு முக்கிய காரணமாகிறது.
மிகவும் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட பலர், தங்களது அபார நம்பிக்கையால் மீண்டு வந்த வரலாறுகள் ஏராளம். சாதாரண விஷயங்களுக்கே, புல்தடுக்கி இறந்தவர்களும் ஏராளம்.
நமது பலம்...
இந்த உலகில் ஒவ்வொருவருமே, ஒரு தனித்திறமையுடன் பிறக்கின்றனர். ஒருவருக்கு நல்ல நினைவுத்திறன் இருக்கலாம், ஒருவருக்கு விளையாட்டுத் திறன் இருக்கலாம், ஒருவருக்கு குரல் வளம் இருக்கலாம், ஒருவருக்கு சிறந்த ஆராய்ச்சித் திறன் இருக்கலாம், ஒருவருக்கு நல்ல தோற்றப் பொலிவு இருக்கலாம். தனது தனித்திறமையை இளமையிலேயே கண்டுகொண்ட ஒருவர், வாழ்வில் நல்ல உயரத்தை எட்டுகிறார். ஆனால், இதுபோன்றவர்கள் குறைவாகவே உள்ளனர்.
தோல்வியடைந்தவர்கள், தங்களின் குறைகளையும், தங்களின் சுற்றத்தையும் குறைகூறிக் கொண்டே இருந்து விடுவார்கள்.
சச்சின் டெண்டுல்கரை உதாரணமாக எடுத்துக்கொண்டால், அவர் சராசரியைவிட குறைவான உயரம் கொண்டவர், ஆனாலும் தனது பேட்டிங் திறமையை சரியான நேரத்தில் அவர் அடையாளம் கண்டதால், அவர் இன்று இந்தளவிற்கு பிரபலமாகியுள்ளார்.
நாம் கண்ட மற்றும் காணும் பல பிரபலங்கள் தன்னகத்தே பல குறைகளை உடையவர்கள். ஆனாலும் குறைகளை ஒதுக்கித்தள்ளி, நிறைகளைக் கண்டு, அவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியதால் இன்று பெரிய மனிதர்களாக வந்துள்ளனர்.
எனவே குறைகளை மறப்போம்! நிறைகளை மட்டுமே நினைப்போம்! வாழ்வில் வெற்றியடைவோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.