சமஸ்கிருதமும், போலி ஆரிய கோட்பாடும்...
கைபர், போலன் கணவாய்களின் வழியாகப் படையெடுத்து வந்தவர்களே ‘ஆரியர்’ என்பது ஐரோப்பியர்களின் கட்டுக்கதை. நான் பலவிடங்களில் அதைக் கோடிட்டுக் காட்டியுள்ளேன். இருந்தும், 4000-5000 ஆண்டுகளுக்கு முன் இந்துக்குசும் மலைகளைக் கடந்து வந்த ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தை கைப்பற்றினரென நம்மவரும் கிளிப்பிள்ளைப் போல் ஒப்புவிக்கின்றனர்.
எனக்குத் தெரிந்த வரையில், கைபர், போலன் கணவாய்களின் ஊடாக இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு எல்லையைக் கடந்து வந்து சிந்துவெளி பகுதிகளின் மேல் போர் தொடுத்தவன் மாசிடோனியக் கிரேக்கன் அலெக்சாண்டர் மட்டுமேயாவான். இதற்குத் தெளிவான வரலாற்றுச் சான்றுகள் உண்டு.
மேலும், சமஸ்கிருதம் உலகின் பழமையான மொழிகளில் ஒன்று என்றும் 4000-5000 ஆண்டுகளுக்குமுன் இந்தியாவுக்குள் வந்த ஆரியரின் மொழியாயிருந்தது என்பதும் பெரிய பொய்.
கி. பி. 2ஆம் நூற்றாண்டுக்குமுன் சமற்கிருதம் எனும் மொழியே இல்லையென்பதை அண்மைக்கால ஆய்வுகள் தெளிவுறக் காட்டுகின்றன.
மேலும், சமற்கிருதம் என்றுமே மக்களால் பேசப்படாத மொழி.
எசுப்பராந்தோவைப் (Esperanto) போன்று அஃது ஒரு செயற்கை மொழி.
கி. மு. 326ஆம் ஆண்டில் சிந்துவெளிப் பகுதியின்மேல் அலெக்சாண்டர் நடத்திய படையெடுப்பு இத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது.
சிந்துவெளியிலிருந்த தமிழரசுகளை அலெக்சாண்டர் ஒழித்துக் கட்டினான். அங்குப் பேச்சு வழக்கிலிருந்த தமிழ்மொழி கட்டு குலைந்து கெட்டுத் திரிந்ததும், அலெக்சாண்டரின் படையெடுப்பால் வந்த வினை. அதன் விளைவாக, கந்தார நாட்டில் தமிழ் வரிவடிவத்தைத் தழுவிக் கரோத்தி (Karoshti) வரிவடிவம் தோன்றியது. வடஇந்தியாவைத் தமிழர்கள் இழக்க அலெக்சாண்டரின் படையெடுப்பே முற்றுமுதல் காரணம்.
அலெக்சாண்டருக்குப் பின் - அதாவது, அலெக்சாண்டர் இறந்த 323ஆம் ஆண்டுக்குப் பின் - கி. மு. 180ஆம் ஆண்டில் டெமெட்ரியசு (Demetrius) எனும் கிரேக்கப் பாக்டீரிய (Greeco-Bacteria) அரசன் சிந்துப் பகுதியின் மேல் படையெடுத்து இந்தியக் கிரேக்கப் பேரரசை (Indo-Greek Empire) அங்கு நிறுவினான். அவனது ஆட்சிப் பரப்பு இன்றையை குசராத் உள்ளிட்ட சிந்துவெளிப் பகுதி முழுமையையும் உள்ளடக்கியிருந்தது.
இந்தியக் கிரேக்க ஆட்சியின்கீழ்ச் சிந்து வெளியில் கிரேக்கருடன் இனக்கலப்பும் மொழிக்கலப்பும் ஏற்பட்டது. சிந்து வெளியில் பேசப்பட்டுவந்த தமிழும் திரிந்து கலப்பு மொழிகள் உருவாயின. அதே போழ்து, கீழைக் கங்ககைக் கரையிலிருந்து கங்கரிடை (மகத) நாட்டிலும் தமிழ் கெட்டுத் திரிந்தது. ‘அரைமகதம்’, ‘சூரசேனி’ முதலான பாகத (பிராகிரத) மொழிகள், கொச்சையான பேச்சு வழக்கு மொழிகளாகத் தோன்றின.
புத்தர்களும் அருகர் (சைனர்) களுமே அதற்குக் காரணமாயினர். புத்தர்கள் ‘பாழி’ எனும் செயற்கை மொழியையும் தோற்றுவித்தனர்.
சிந்து வெளிப் பகுதியிலும் கீழைக் கங்கைக் கரையிலும் தமிழரசுகள் வீழவும் தமிழ் வழக்கொழிந்து பாகத மொழிகள் தோன்றவும் முதற்பெரும் காரணம் அலெக்சாண்டரின் படையெடுப்பேயாகும்.
ஆரியக் கோட்பாடும் திராவிடக் கோட்பாடும் கைகோத்துக் கொண்டு அந்த மாபெரும் உண்மையை மூடி மறைத்தன.
கொச்சையான பாகத மொழிகளைத் திருத்தமுறச் செய்ய எண்ணி (செவ்வனே செய்யப்பட்டது எனும் பொருள்படும்) ‘சமற்கிருதம்’ எனும் செயற்கை மொழி கி. பி. 2ஆம் நூற்றாண்டளவில் தோற்றுவிக்கப்பட்டது.
மகாயான புத்தர்களாலும் அருகர் (சைனர்) களாலும் வடுகப் பிராமணர்களாலும் அது முனைப்புடன் போற்றி புரக்கப்பட்டது; வளர்க்கப்பட்டது.
சமற்கிருதம் சேரலத்தில் (கேரளத்தில்) தோற்று விக்கப்பட்டதாக பாவாணர் ஒரு நூலில் கூறியுள்ளார். (எந்த நூலில் அது வருகிறது என்பது நினைவில் இல்லை.)
வேறு சிலரோ, குமரி மாவட்டத்தில் தான் சமற்கிருதம் தோற்றுவிக்கப்பட்டதெனக் கூறுகின்றனர்.
மேற்போந்த மெய்ம்மைகளை யெல்லாம் திறந்த மனத்துடன் அலசி ஆராய்ந்து தமிழரின் உண்மையான வரலாற்றைப் புத்தமைக்க வேண்டும்.
- ஆய்வறிஞர் குணா...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.