வட ஆப்பிரிக்காவில், சஹாரா பாலைவனப் பகுதிகளில் வாழும் துவாரக் பழங்குடியின மக்கள் விநோதமான பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர். அந்த சமூகத்தில் எல்லாவற்றிலும் பெண்களுக்கு தான் முதலிடம்.
அல்ஜீரியா, மாலி, நைஜர், நைஜீரியா, மொரோக்கோ, மொரிட்டானியா ஆகிய நாடுகளை இணைக்கும் சஹாரா பாலைவனப் பகுதிகளில் நாடோடி வாழ்க்கை வாழும் துவாரக் மக்கள் தனித்துவமான பெர்பர் மொழி பேசுகின்றனர். வட ஆப்பிரிக்காவுக்கு அரேபியர்கள் வருவதற்கு முன்னர் அந்தப் பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள். தற்போது பல தேசங்களுக்குள் பிளவு பட்டு, ஒடுக்கப் படும் சிறுபான்மையின மக்களாகி விட்டனர்.
அரேபியப் படையெடுப்புகளுக்கு பின்னர் துவாரக் மக்கள் இஸ்லாமியராக மாறி விட்டிருந்தாலும், தமது தனித்துவமான கலாச்சாரத்தை கைவிடவில்லை. அவை எமக்கு மட்டுமல்லாது, அங்கு வாழும் அரேபியருக்கும் புதினமானவை.
அது ஒரு முற்றிலும் மாறுபட்ட சமுதாயம். துவாரக் பெண்கள் அந்நிய ஆடவருக்கு முன்னால் கூட முகத்தை மூடுவதில்லை. ஆனால், ஆண்கள் கட்டாயம் முகத்தை மூட வேண்டும். இதை அவர்கள் பருவ வயதில் இருந்தே பின்பற்றுகிறார்கள்.
அதாவது ஒரு துவாரக் ஆண் தனது மனைவிக்கு முன்னால் மட்டுமே முகத்தை மூடாமல் இருக்கலாம். வெளியில் எந்தப் பெண்ணும் பார்க்க முடியாமல் முகத்தை மூடி இருக்க வேண்டும். விருந்தினருடன் சாப்பிடும் பொழுது கூட முகத்திரையை அகற்றாமல் உணவை வாய்க்குள் செலுத்த வேண்டும். வீட்டில் உள்ள பெண் பேசத் தொடங்கினால் ஆண் வாயை மூடிக் கொள்ள வேண்டும்..
திருமணத்திற்கு சம்மதமா என்று முதலில் பெண் தான் ஆணைக் கேட்க வேண்டும்! அதே மாதிரி மண முறிவுகளும் சாதாரணம். ஒரு பெண் மறுமணம் முடிப்பது குடும்பத்தில் ஒரு கொண்டாட்ட நிகழ்வாக வரவேற்கப் படும். விவாகரத்து செய்தால் சொத்துக்கள் அனைத்தும் பெண்ணுக்கே உரிமையாகும். அத்துடன் திருமணமான பெண் வேறு ஆண் துணையை வைத்திருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்.
உண்மையில் பண்டைய காலத்தில் நிலவிய தாய் வழிச் சமூகத்தின் தொடர்ச்சி தான் துவாரக் பழங்குடியினரின் மரபு. அதை அவர்கள் ஆயிரமாயிரம் வருடங்களாக பின்பற்றுகிறார்கள். ஆண் மேலாதிக்கத்தை வலியுறுத்தும் இஸ்லாமிய மதம் கூட அதில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.
ஆனால், அண்மைக் காலத்தில் வளர்ந்து வரும் அரசியல் இஸ்லாம் துவாரக் மக்களயும் விட்டு வைக்கவில்லை. ISIS எனும் பெயரில் இயங்கும் பல்வேறு ஆயுதக் குழுக்கள் பெண்களை பூர்க்கா அணிய வற்புறுத்துகின்றன. குறிப்பாக மாலி, நைஜீரியாவின் வட பகுதிகளில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக தனித்துவமான துவாரக் கலாச்சாரம் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.