13/10/2020

துன்பம் நிரந்தரமாய் நீங்க...

 


துன்பம் வரும் போது அதை அப்படியே அனுபவியுங்கள். அதைக் கண்டு ஓட வேண்டாம். அப்படி ஓடினால் அது உங்களைத் துரத்திக் கொண்டு தான் வரும்.

அதை மறக்க நினைத்தால் அது உங்கள் மனதில் ஆழத்தில் பதுங்கி விடும். மன வியாதிகளுக்கு மருந்து கொடுத்தால் அது உள்ள துன்பத்திலிருந்து உங்களை விலகி ஓடச்செய்யும்.

அதனால் துன்பத்திலிருந்து உங்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்காது. நீங்கள் துன்பத்தினால் வரும் வடுவை தைரியமாக முழுமையாகப் பார்க்க வேண்டும்.

உங்கள் அறையில் அமைதியான சூழ்நிலையில் தனிமையில் அமர்ந்து வேறெதிலும் மனம் ஈடுபடாது உங்கள் உள்போராட்டங்களைக் கவனியுங்கள்.

உங்கள் உள்ளே உண்டான வடுவின் வலியை முழுமையாக மேலே கொண்டு வந்து உணர்ந்தால் அது உங்கள் இதயத்தைப் பிழியும். அது மரண வலியாகத் தான் இருக்கும்.

அதை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அப்போது நீங்கள் ஒரு குழந்தை போலக் கதறலாம். தரையில் புரண்டு அழலாம்.

அப்போது அந்த வலி உங்கள் உடல் முழுவதும் பரவி இருப்பதை உணர்வீர்கள்.

துன்பம், கவலை என்று ஏற்படும் போது அதை மறக்க அல்லது வெளியே தள்ள இதுவரை பழக்கப் பட்டிருக்கிறீர்கள்.

அதற்கு மாறாக அதை எவ்வளவு அதிகப் படுத்த முடியுமோ, அப்படி அதிகப் படுத்தி, அதை நீங்களே ஜீரணம் செய்வது என்பது ஒரு புதுமையான மாறுபட்ட செயல்.

அது உங்கள் இயல்பாக மாற கொஞ்சம் நாட்கள் ஆகும்.

அப்படி அந்த சக்தியை முழுமையாக ஜீரணம் செய்து விட்டால், அது உங்கள் உடலோடும் உள்ளத்தோடும் கலந்து விட்டால் உங்களிடம் புதுமையான ஒரு கதவு திறக்கும்.

அதன் வழியாக நீங்கள் ஒரு புதிய பயணத்தை தொடங்குவீர்கள்.

நீங்கள் எப்போது அந்த வலியை பரிபூரணமாக ஏற்றுக் கொண்டு விட்டீர்களோ, அதனுடன் கலந்து விட்டீர்களோ, அதன்பிறகு அது உங்களுக்கு ஒரு வலியாகவோ, துன்பமாகவோ தெரியாது.

ஒரு பெரிய ரசாயன மாறுதல் உங்களுக்குள் இப்போது நடந்திருக்கிறது.

இப்போது உங்கள் வலி, துயரம், கவலை, இறுக்கம் அனைத்தும் மகிழ்ச்சி, ஆனந்தம், புத்துணர்ச்சி,பூரிப்பாக மாறி இருக்கும்.

இதை நீங்கள் அனுபவத்தில் தான் உணர முடியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.