04/09/2017

தமிழர் கடவுளா விநாயகர் ?


ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை என்று மிகத் தொன்மையான நூல்களிலும் தொடக்கபாடலாக திணிக்கபட்டு , மூல முதல்வன் , கணங்களின் அதிபதி ,என்றும் துதிக்கப்பட்டும் , இந்திய கடவுள்களிலேயே எல்லா ஆலயங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் விநாயகர் தமிழரின் கடவுளா?

தமிழ் நாட்டுக்கு எப்படி வந்தார் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம்...

ஆறுமுகம் பன்னிரு கரம் , என்று தமிழின் வடிவமாகவே உருவகிக்கப்படுகிற முருகனையும்  , தென்னாடுடைய சிவனே போற்றி என்று போற்றப்பட்ட தென்னிந்திய கடவுளான சிவனையும் இடம் பெயர்த்தி வந்த இந்த விநாயகர் தமிழரின் வாழ்வில் , பண்டிகையில் , கலாசார , பண்பாட்டில் நுழைந்த கதை சற்றே யோசிக்க வேண்டிய ஒன்றாகவே உள்ளது..

பொதுவாகவே இந்தியாவின் வரலாறு மத சண்டைகளின் வரலாறு , முகலாயர் , ஆங்கிலேயர் , பல்லவர்  களப்பிரர் என்று மாறி மாறி நம்மை பலரும் ஆண்டதால் , அவரவர் ஆட்சியின் போது அவர்கள் திணித்த பண்பாட்டு , கலாசார திரிபுகளை அப்படியே ஏற்று கடைபிடித்து வருகிறோம் சுயம் மறந்து..

இப்பொழுது ஜனநாயகம் வந்த பின் நமக்கான , நாம் தொலைத்த நமது பண்பாடு கலாசாரத்தை கண்டு பிடித்து கடைபிடிக்க வேண்டாமா ?

தமிழரின் பண்பாட்டின் மீது திணிக்கப்பட்ட இந்த கணபதி சாளுக்கிய மன்னர்களால் அறிமுகபடுத்தபட்டு மிக லாவகமாக சிவ பார்வதி குடும்பத்தில் திணிக்கப்பட்ட ஒருவர்..

விநாயகர் என்கிற குறியீடு இருக்கும் வரை சாளுக்கிய மன்னர்களின் பண்பாடு , கலாசாரம், அவர்களின் நினைவு பாதுகாக்கப்படும்..

போதி மரம் எனப்படுகிற அரச மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றதின் அடையாளமாய் பிக்குகளால் அரசமர அடிதோறும் புத்தர் சிலைகள் இடம் பெற்றிருந்திருக்கின்றன. அவைகளை புத்தமத அழித்தொழிப்பின் போது இடம் பெயர்த்தி இவ்வினாயகரை அரசமரம் தோறும் இடம்பெற செய்திருக்கிறார்கள்.

எப்படி தமிழில் தெலுங்கு கலந்ததால் நாஸ்தா என்கிற வார்த்தை வந்தோ.

தமிழில் சமஸ்கிருதம் கலந்ததால் எப்படி மறைக்காடு வேதாரண்யம் ஆனதோ ?

முதுகுன்றம் , விருதாசலம் ஆனதோ அப்படி தமிழக கலாசார பண்பாட்டில் இடை செருகல் வருகிற போது நமது பண்பாடும் , கலாச்சாராமும் அழிந்து போகிறது.

கி. மு . மூன்றாம் நூற்றாண்டிலிருந்து , கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை வந்த சங்ககால தமிழ் இலக்கியம் , அகழ்வாராய்ச்சி , கல்வெட்டு இவைகள் எவற்றிலும் இந்த கணபதி தமிழகத்தில் வழிபாட்டில் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை.

சங்க காலத்தை அடுத்து வந்த மூன்று நூற்றாண்டுகளில் ( கி.பி.இருநூறு முதல் கி.பி ஐநூறு ) வரை தமிழகம் தமிழ் மன்னர்களின் கையிலிருந்து நழுவிய நேரத்தில் தான் இது நிகழ்ந்திருக்கிறது.

இந்திய பரப்பில் தமிழர்கள் ஒரு சிறுபான்மை இனமாக நடத்தபடுகிற இத்தருணத்தில் தமிழ் கடவுள்களின் நிலையோ பரிதாபத்திலும் பரிதாபம் , இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிற , பண்டிகைகளுக்கு உகந்தவராக , எல்லோராலும் வணங்கப்படுகிற  கணபதியை போல , தமிழகம் தாண்டி  முருகன் வணங்கப்படுகிறாரா ?

அல்லது பண்டிகைகளுக்கு  உகந்தவராகிறாரா ? இல்லையே ?

சிவனுக்கு பிறந்த இரண்டு பிள்ளைகளில் ஒருவர் தேசிய கடவுளாகவும் , ஒருவர் பிராந்திய கடவுளாகவும் பேதபடுத்தபடுவது ஏனென்று இன்னுமா புரியவில்லை உங்களுக்கு ?

தமிழனுக்கும் , தமிழ் கடவுளுக்கும் ஏனிந்த நிலை என்று தமிழர்களே சிந்திப்போம்...

விநாயகர் என்கிற குறி ஈட்டிற்கான பிறந்தநாளை வருடா வருடம் நினைவுபடுத்திக் கொண்டாட வைத்து தன் பண்பாட்டு , கலாசாரத்தை அணையாமல் பாதுகாத்து வருபவர்களுக்கு தமிழர்கள் தரப்போகும் பதில் தான் என்னோவோ ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.