கிருஷ்ணகிரியை அடுத்த, கந்திக்குப்பம் என்னும் இடத்தில் சாலை ஓரம் நின்றவர்கள் மீது நெடுஞ்சாலையில் வந்த கார் மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்து ஏற்படுத்திய காரை, சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த முனிராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதேபோல, பெங்களூர் பதிவு எண் கொண்ட வாகனத்தை அஷ்வின் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த இரண்டு கார்களும் போட்டி போட்டுகொண்டு தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டு இருந்தபோது கந்திகுப்பம் என்னும் இடத்தில், கர்நாடக பதிவு எண் கொண்ட கார் முன்னால் சென்ற காரின் மீது மோதி முந்தி சென்றது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த முனிராஜ் கார், சாலை ஓரம் வந்துகொண்டு இருந்த மல்லப்பாடி பகுதியைச் சேர்ந்த வனஜா, கந்திகுப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சரத்குமார், கோகுல் மற்றும் மருதேபள்ளியைச் சேர்ந்த தருமன் ஆகிய நான்கு பேர் மீது மோதியது. இந்த விபத்தில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இவர்களது இரு சக்கரவாகனம் மற்றும் ஒரு சைக்கில் முழுவதும் சேதமானது.
இதையடுத்து, ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய காரை அடித்து நொறுக்கினர். மேலும், விபத்துக்கு காரணமாக இருந்த கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனத்தை தீயிட்டு கொளுத்தினர். சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், வாகன டயர்களை போட்டு கொளுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால், சாலையின் இரு புறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றது.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வலியுறுத்தினார். ஆனால், பொதுமக்கள் கலைந்து செல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் வாகனங்களை எடுக்க விடாமல் சக்கரத்தில் தலை வைத்து போராட்டம் செய்தனர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதும் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி போலீஸார் கூட்டத்தை கலைத்தனர். இதற்கு, பொதுமக்களும் போலீஸாரின் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கந்திகுப்பம் பகுதியே கலவரம் மூண்டு பதற்றமாக காட்சியளித்தது.
பின்னர், சாலைமறியலில் ஈடுபட்டவர்களை முழுவதும் களைத்த பின்பு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. காயமடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.