அமெரிக்க குடியரசுத் தலைவர் டிரம்பு மோடிக்கு இணையான ஒரு பாசிசவாதி. ஆனால் இந்திய ஊடகங்கள் மோடியைக் கொண்டாடுவதை போல அமெரிக்க ஊடகங்கள் டிரம்பைக் கொண்டாடவில்லை. இதன் பொருள் அமெரிக்க ஊடகங்கள் பாசிசத்தை எதிர்க்கின்றன என்பதா? உண்மையில், அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் பல்வேறு கொடுங்கோலர்களை ஆதரிக்கும் வேலையைத் தான் அமெரிக்க ஊடகங்கள் காலாகாலமாக செய்து வருகின்றன. ஆகவே அமெரிக்க ஊடகங்களுக்கும் அமெரிக்க தாராளவாதிகளுக்கும் டிரம்பைப் பிடிக்காமல் போனதற்கானக் காரணம் டிரம்பின் தீவிர வலதுசாரி அரசியலோ, வெறுப்பு அரசியலோ அல்ல.
டிரம்பு அடாவடித்தனமாக நடந்து அமெரிக்காவின் பெயரைக் கெடுக்கிறார் என்பதுதான் அவர்களுக்கு வருத்தம். பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றாலும் ஒபாமாவைப் போல “மேடை நாகரிகத்தை” கடைபிடித்திருந்தால் அமெரிக்க ஊடகங்கள் கவலைப்பட்டிருக்காது. டிரம்பு அமெரிக்காவின் பிம்பத்தைச் சிதைக்கிறார் என்பதுதான் அவர்களது சினத்திற்கு முதன்மையான காரணம்.
இந்த தேர்தலில், "டிரம்பை தோற்கடிப்பதே எனது நோக்கம்" என்ற ஒற்றை முழக்கத்தை மட்டுமே வைத்து தேர்தலை எதிர்கொண்டவர் பைடன். மற்றபடி டிரம்பின் கொள்கைகளை பெரிய அளவில் மாற்ற வேண்டிய தேவை பைடனுக்கு இருக்கவில்லை. "நான் டிரம்பு அல்ல" என்பதுதான் பைடன் தேர்தலில் மீண்டும் மீண்டும் முன்வைத்த முழக்கம்.
பைடனை விட மிக அதிக முற்போக்கு கொள்கைகளை முன்னெடுத்தவர் ஒருவர் டெமாக்ரடிக் கட்சியிலேயே இருந்தார். அவர் பெயர் பெர்னி சேண்டர்சு. அமெரிக்காவின் பெருமுதலாளிகளை வெளிப்படையாக எதிர்த்தவர். பொலிவியாவின் லித்தியத்தைத் திருட அந்த நாட்டில் அமெரிக்கா நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பைக் கண்டித்தவர் பெர்ணி. அனைத்து மக்களுக்கும் அரசு சார்பான மருத்துவக் காப்பீடு, பெருமுதலாளிகளுக்கு அதிக வரி, பல்வேறு விதமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், தொழிலாளர் நலன் சார்ந்த திட்டங்கள் என பல மக்கள் நலத் திட்டங்களை முன்மொழிந்தார். இளைஞர்கள் சிறுபான்மையர் முதற்கொண்டு பல தரப்பினரிடம் பெரும் ஆதரவைக் குவித்தார். ஆனால் ஒபாமா உள்ளிட்ட டெமாக்ரடிக் கட்சியின் பழம் பெருச்சாளிகள் சேண்டர்சு என்ற இடதுசாரி வெல்வதை விரும்பவில்லை. தீவிரமாகத் திட்டமிட்டு உட்கட்சித் தேர்தலில் அவரைத் தோற்கடித்து உப்புச் சப்பற்ற பைடனை வேட்பாளராக்கினர்.
டெமாக்ரடிக் கட்சியில் வேட்பாளராக போட்டியிட்டவர்களிலேயே ஆகப் பெரிய வலதுசாரி பைடன். அவரைத்தான் கட்சி தேர்தலில் நிறுத்தியது.
அதாவது அமெரிக்க பெருமுதலாளிக்கு மிகுந்த விருப்பமான வேட்பாளர் பைடன்.
டெமாக்ரடிக் கட்சி தங்கள் கட்சிக்காரரான சேண்டர்சை தோற்கடிக்கக் காட்டிய முனைப்பைக் கூட டிரம்பைத் தோற்கடிப்பதில் காட்டவில்லை. அதன் விளைவுதான் பெரும்பாலான ஊடகங்களின் தொடர்ச்சியான டிரம்பு எதிர்ப்பு பரப்புரையையும் மீறி டிரம்பு வெற்றிக்கு இவ்வளவு நெருக்கமாக வரக் காரணம்.
ஆகவே, இப்பொழுது பைடனின் வெற்றியைக் கொண்டாடுவது, தன்னை வெளிப்படையாக சோசியலிசுடு என்று அறிவித்துக் கொண்ட முற்போக்காளரான பெர்ணி சேண்டர்சைத் தோற்கடித்ததைக் கொண்டாடுவதற்கு சமம் ஆகும்.
சரி, இனி இந்த பைடன் எத்தகையவர் எனப் பார்க்கலாம்.
2003 ஆம் ஆண்டு பொய்க் காரணங்களைச் சொல்லி ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்தது. அப்படையெடுப்பை எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பைடன் வலுவாக ஆதரித்தார். ஈராக்கில் அமெரிக்கா நிகழ்த்திய கொடும் மனித உரிமை மீறல்கள்தான் ஐசிசு என்ற பயங்கரவாத இயக்கம் உருவாகக் காரணமாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிசுதானை சிதைத்து சின்னாபின்னப்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று, மன நோயாளியாக்கி, இடம்பெயரச் செய்து, இன்று வரை தொடரும் ஆப்கானிய படையெடுப்பை ஆதரித்தவர் பைடன்.
பிற நாட்டு பொதுமக்களை கொத்து குண்டுகள் (cluster bomb) மூலம் தாக்குவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று கோரிய சட்ட வரைவிற்கு எதிர்த்து வாக்களித்தவர்.
அமெரிக்கா இந்தோனேசியாவில் கூலிக் கொலைப்படைகளுக்குப் பயிற்சியளித்து தனது அரசியல் நலன்களுக்கு பயன்படுத்தி வந்தது. பலரை கூட்டங்கூட்டமாக கொன்ற இவர்களுக்கு அமெரிக்கா பயற்சியளிப்பதை தொடர வேண்டும் என வாக்களித்தவர்.
சித்திரவதை, கண்காணிப்பு முதலான பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு சட்ட அனுமதி வழங்கிய "தேசப்பற்று" சட்டத்தை முன்னெடுத்த முன்னோடி பைடன். அமெரிக்கா பின்னாட்களில் "தீவிரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றொழிப்பதற்கு முன்னோடியாக அமைந்த சட்டம் இது.
அமெரிக்க முதலாளிகளுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளில் அமெரிக்கா கடந்த காலங்களில் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரித்தவர். பொலிவியா, வெனிசுவேலா போன்ற நாடுகள் அண்மைக்கால எடுத்துக்காட்டுக்கள்.
மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவேன் என்று டிரம்பு அறிவித்ததை பாசிசம் என்றார்கள். ஆனால் அதற்கு முன்பே அங்கு வேலி அமைப்பதை ஆதரித்தவர் பைடன்.
NAFTA, TPP என்ற பெயரில் தென் அமெரிக்க நாடுகளை பொருளாதார வழியில் அடிமைப்படுத்தும் அமெரிக்க பெருமுதலாளிகளுக்கு ஆதரவான சட்டங்களை ஆதரித்தவர். இச்சட்டங்கள் உள் நாட்டுத் தொழில்களை ஒழித்துக் கட்டி விட்டு அமெரிக்க முதலாளிகள் தொழில் செய்ய களம் அமைத்துக் கொடுப்பவை. லத்தீன் அமெரிக்க மக்கள் இவற்றைக் கடுமையாக எதிர்த்தனர். பல நாடுகளில் ஆட்சி மாற்றத்திற்கும் இவை காரணமாகின. (இந்தியாவில் இத்திட்டங்கள் 1991 இல் இருந்து எதிர்ப்பின்றி நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.)
பயங்கரவாதக் கொள்கையான சீயோனியத்தையும் இசுரேல் நாட்டின் கொடும் குற்றங்களையும் (பாலசுதீனியர்களின் எஞ்சி இருக்கும் நிலத்தைப் பறிப்பது, வீடுகள் இடிப்பு, குடிநீர், மருத்துவ வசதிகளைத் துண்டித்தல், பள்ளிக்கூடங்களில் துப்பாக்கிச் சூடு, குழந்தைகளைச் சுட்டுக்கொல்வது, போராட்டக்காரர்களை பீரங்கி வைத்து தாக்குவது) தீவிரமாக ஆதரிப்பவர்.
அமெரிக்க பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் பெருச்சாளிகளின் நெருக்கமான நண்பர். அவர்களிடம் இருந்து அதிக அளவில் நன்கொடைகள் பெறுபவர். கடந்த காலங்களில் அவர்களுக்கு சாதகமான சட்டங்களுக்கு வாக்களித்து அவை நிறைவேற உதவியர். குறிப்பாக சில வங்கிகளுக்கு ஆதரவாக இவர் நிறைவேற்றிய சட்டங்கள் 2008 உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு அடி கோலியவர். பின்னர் மன்னிப்பும் கேட்டார்.
போதை மருந்துகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் கருப்பின மக்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளுக்கு துணை போனவர்.
பெரும் ஊழல் பெருச்சாளி. இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
குழந்தைகள் மற்றும் பெண்களைத் தொடக்கூடாத இடங்களில் பொது மேடைகளில் சீண்டியதாக இவர் மீது குற்றச்சாட்டு உண்டு. அண்மையில் இவருடன் பணி புரிந்த இளம்பெண் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டும் முன்வைத்தார்.
அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சூளுரைத்தவர். தனியார் மருந்து நிறுவனங்களின் உற்ற தோழர்.
ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கான பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கடந்த கால கடந்த காலங்களில் எதிர்த்தவர்.
இத்தகைய ஒருவரைத்தான் உலகம் முழுக்க லிபரல்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏறக்குறைய இக்குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் கமலா அம்மையாருக்கும் பொருந்தும்.
ஆம், டிரம்ப் என்ற பாசிசவாதி தோற்றது ஒரு நல்ல செய்தியே. ஆனால் பைடனின் வெற்றியிலும் மகிழ்வதற்கு எதுவும் இல்லை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.