11/11/2020

பண்டைத்தமிழர் கண்ட முப்பொருள் கொள்கை...

 


பண்டைய தமிழர்கள் உலகின் மேலும் உலக உயிர்கள் மேலும் பற்று உடையவர்களாக வாழ்ந்தார்கள். இந்த உலகமும் அதில் வாழ்கின்ற உயிர்களும் யாரல்? எப்படி? தோன்றி அழிகின்றன என்ற கேள்விக்கு அவர்கள் கண்ட விடையே கடவுள். அதனால் கடவுள் என்ற மெய்ப்பொருளை அவர்கள் உருவகித்துக் கொண்டார்கள்.

சுருங்கச் சொல்லப்போனால் இந்த உலகையும் உயிர்களையும் இயக்குவது கடவுளே என்ற முடிவுக்கு வந்தனர். ஆதலால் கடவுள், உயிர், உலகம் என்கின்ற முப்பொருள் கொள்கை உடையவர்களாகப் பண்டைத் தமிழர் இருந்தனர். முழு உலகையும் தழுவியதாய் அக்கொள்கை இருந்தது. அது தமிழர் நெறி என அழைக்கப்பட்டது. பிற மொழிகளும், பிற சமயக் கொள்கைகளும் தமிழரிடம் வேரூன்ற முன்னர் இருந்த முப்பொருள் கொள்கை அது.

முழுவுலகம் - கடவுள், உயிர், உலகம் - தமிழர் நெறி

தமிழர் முழு உலகம் தழுவிய தமது முப்பொருள் கொள்கையை பிறமொழி, பண்பாடுகளின் கலப்பால் மனிதனுக்காக மாற்றிய போது அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருட்கொள்கை பிறந்தது.

மனிதன் — அறம், பொருள், இன்பம் — தமிழர் சமய நெறி

இந்த மூன்றாலும் முத்தியை அடையலாம் என்றனர். அதுவே தமிழர் சமய நெறியாகும்.

சமண, பௌத்த, வைணவ, சாக்த மதங்களால் பின்னிப்பிணைய முற்பட்ட தமது சமயக் கொள்கையை அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவும், அறிவார்ந்த உண்மைகள் உடையதாகவும் மாற்றினர். மனிதனுக்காக இருந்த முப்பொருள் கொள்கையை மாற்றி, உயிருக்காக சைவ சித்தாந்தக் கொள்கையை உருவாக்கினர். அதுவே பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் கொள்கை. அதனை சைவசமய நெறி என அழைத்தனர்.

உயிர்  —  பதி, பசு, பாசம் —  சைவசமய நெறி.

கடவுளை பதி என்றும் ஆன்மாவை பசு என்றும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் பாசம் என்றும் குறிப்பிட்டனர்.

இவ்வாறு பண்டைய தமிழர் தமது கடவுட்கொள்கையை உலகிற்காகவும், மனிதனுக்காகவும், உயிருக்காகவும் பிரித்து - தனித்தனியான முப்பொருள் கொள்கை உடையோராய் வாழ்ந்தனர்.

அத்துடன் உலகம் தழுவியதாய் இருந்த அவர்களது முப்பொருள் என்ற சொல் கால ஓட்டத்தால் மனிதனுக்காகவும், உயிருக்காகவும் சுயநலம் கருதி மாறி அமைந்ததையும் காண முடிகின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.