11/11/2020

பண மதிப்பிழப்பைக் கொண்டாடுவது என்பது அதற்குப் பலியானவர்களின் கல்லறை மீது அமர்ந்து கேக் வெட்டுவதற்கு ஒப்பானது: சிவசேனா சாடல்...

 


மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டாடுவது என்பது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் கல்லறையில் அமர்ந்து கேக் வெட்டுவதற்கு ஒப்பானது என்று சிவசேனா கட்சி சாடியுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி இரவு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டில் கறுப்புப் பணம், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிக்கவும், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவும் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆனால், இந்த நடவடிக்கையால் கள்ளநோட்டுகள் வங்கிக்குள் வராது. கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில், ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் அவ்வாறு ஏதும் கூறப்படவில்லை.

மிகக்குறைந்த அளவே கள்ளநோட்டுகள் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்தப் பண மதிப்புநீக்க நடவடிக்கையின்போது வங்கியில் பணம் பெறவும், ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் நீண்டவரிசையில் காத்திருந்தபோது ஏராளமானோர் நாடு முழுவதும் உயிரிழந்தனர். பல தொழில்கள் முடங்கி, சிறு, குறுதொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியுள்ளன.

இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 4-வது ஆண்டில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் வெளிப்படைத் தன்மையை அதிகப்படுத்தவும், கறுப்புப் பணத்தைக் குறைக்கவும் பயன்பட்டது எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது...

2016ஆம் ஆண்டு நாட்டில் கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது இந்திய வரலாற்றில் கறுப்புப் பக்கமாக இருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் அதைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையும் நாட்டின் நலனைக் கடுமையாகப் பாதித்துவிட்டது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், ஏராளமான மக்கள் தற்கொலை செய்து கொண்டார்கள், வேலையிழந்தார்கள். ஏராளமானோர் உயிரிழந்தார்கள். வர்த்தகம், தொழில் ஆகியவை அழிந்துபோயின. இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டாடுபவர்கள் அந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் கல்லறையில் அமர்ந்து கேக் வெட்டுவதற்குச் சமமாகும்.

ராமர் கோயில் கட்டுமானம், பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை ஆகியவற்றை பிஹார் தேர்தலில் பாஜக எழுப்பி வாக்குக் கேட்டது. ஆனால், அதன் மூலம் மக்களைத் திசைதிருப்ப முடியாது. தேஜஸ்வி யாதவ் வேலை குறித்த வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தபின், அங்கு சூழல் மாறியுள்ளது. அவரின் தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலும் வேலையில்லாத இளைஞர்கள்தான் கூட்டத்துக்கு வந்தார்கள். இது எதை உணர்த்துகிறது''. என சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.